Wednesday 24 December 2014

தமிழ் சினிமாவின் மகா கலைஞர்களை உருவாக்கிய பிதாமகன்!

இன்று சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என சொல்லி கொள்ளும் இருவரும் ஒரு காலத்தில் வாய்ப்பிற்காக அழைந்தவர்கள் தான். அவர்களை இந்த சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தவர் தான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்.
இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். அதற்கு முன்பு தமிழகத்தின் முத்துப்பேட்டையில் ஒரு வருடம் ஆசிரியராக பணிபுரிந்தார். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார் . இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே மையமாக விளங்கின.
தமிழ் சினிமாவை எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற ஜாம்பவான்கள் ஆண்டு கொண்டு இருந்த நேரத்தில் ஹீரோக்களை தவிர்த்து கதைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் தான் கே.பி. இதில் அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, சிந்து பைரவி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் கமல்ஹாசனை வைத்து பல படங்களை இயக்கியவர். அதேபோல் ரஜினியை மிரட்டும் பல பரிமாணங்களில் காட்டியவர். இவர்கள் மட்டுமில்லாமல் பிரகாஷ்ராஜ், விவேக், சமுத்திரகனி, இயக்குனர் வசந்த், சரண் போன்ற பலரும் இவரது பள்ளிகூடத்தில் இருந்து வந்தவர்களே.
இது மட்டுமின்றி முதன் முதலாக சினிமாவில் பெண்களுக்கு ஒரு கௌரவத்தை கொடுத்தவரும் கே.பி அவர்கள் தான். இவரது கையால் கொட்டு பட்ட பல நடிகைகள் திரைத்துறையின் உச்சத்தை அடைந்தனர். ஆண்களுக்கும் எந்த விதத்திலும் பெண்கள் சலைத்தவர்கள் இல்லை என்ற பெண்ணியம் பேசும் பல படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி படத்தில் நடித்த சுஹாசினிக்கு அந்த வருடத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
இவரின் சாதனையை பாராட்டி இந்திய அரசு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீயை வழங்கியது. அதேபோல் திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது 2000ம் ஆண்டு பெற்றார்.
உங்கள் படங்களின் வாயிலாக பல மணித உணர்வுகளை வெளியே கொண்டு வந்த நீங்கள், எங்களுக்குள் இருக்கும் பல கஷ்டங்களை உங்கள் திரையில் காட்டி ஆறுதல் கூறினீர்கள். ஆனால், இன்று உங்களுக்காக அழும் தமிழ் திரையுலகினருக்கும், தமிழக மக்களுக்கும் ஆறுதல் கூற இங்கு யாரும் இல்லை.
காலம் உங்கள் உயிரையும், உடலையும் பிரித்திருக்கலாம், ஆனால், உங்கள் உணர்வான படைப்புகளை யாராலும் எங்களிடம் இருந்து பிரித்து செல்ல முடியாது. இந்த மகா கலைஞனக்கு சினி உலகம் சார்பாக ஆழ்ந்த வருத்தங்கள். உங்களுக்கான காலம் அழிந்தாலும் நீங்கள் படைத்த காவியம் என்றும் எங்களுடன்.

No comments:

Post a Comment